No icon

‘நம் வாழ்வு’ வார இதழோடு

மேதகு ஆயர் தாமஸ் அக்வினாஸ்

ஆயராக நியமித்த செய்தி அறிந்ததும் தங்கள் மனதில் ஏற்பட்ட உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...

கலக்கம், நமது அன்னை மரியாவுக்கு உண்டான கலக்கம். ‘ஐயோ , எனக்குப் பேசத் தெரியாதே! நான் சிறுப்பிள்ளையாயிற்றே’ (எரே 1:7) என்ற இறைவாக்கினர் எரோமியாவின் கலக்கம். இருப்பினும், ஆண்டவர் என்னைத் தேர்ந்து கொண்டார். “அவர் என்னை கைவிடமாட்டார்” என்ற உள்ளுணர்வும், என் ஆயர் மற்றும் தோழமை குருக்களின் உந்துதலும் என் கலக்கத்தைப் போக்கியது. அன்னை மரியாவைப்போல், “உமது அடிமை” என சொல்ல வைத்தது.

தங்களது விருதுவாக்கு?

“கிறிஸ்துவை வாழ்ந்து பகிர்” நாம் கிறிஸ்துவைப் போதிக்கின்றோம். அதைவிட மேலாக கிறிஸ்துவை வாழ்வது என்பது, அவர் வாழ்ந்து காட்டிய நீதி, அன்பு, சமதர்மம், ஏழைச்சார்பு போன்றவற்றை பின்பற்றுவது என்பது அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகை வாழ்வு ஆழமான பலனைக் கொடுக்கும் என்பதால் இந்த விருதுவாக்கைத் தேர்ந்தெடுத்தேன்.

கோவை ஆயர் என்ற முறையில் தங்களது சிந்தனைக் காட்சி (Vision) என்ன?

மக்களுக்கு இயேசுவை வழங்குவது. மக்களிடம் இயேசுவை கொண்டுச் செல்ல வேண்டுமானால் சரியான ஆன்மீகம் அவர்களுக்குச் சொல்லித் தரப்பட வேண்டும். அவர்களின் வாழ்வு உயர, மலர்ந்து மணம் வீச கல்வி வழங்கப்பட வேண்டும். வாழ்வில் முகவரி இழந்த மக்களுக்கு, மீண்டும் வாழ்வு அளிப்பது எனது முக்கியத் திட்டம்.

தங்களது சிந்தனைக் காட்சியில் எதையெல்லாம் சாதிக்க முடியும் என நினைக்கிறீர்கள்?

என் சகோதர குருக்களோடும், இறைமக்களின் ஒத்துழைப்போடும் என் திட்டங்களை உறுதியாக நிறைவேற்ற முடியும்.

நிர்வாகச் சுமை அதிகரித்து வரும் இக்காலத்தில் தங்களது முன்னுரிமை நிர்வாகத்திற்கா? ஆன்மீகத்திற்கா?

என்னுடைய முன்னுரிமை ஆன்மீக வாழ்விற்காக. ஆயரின் முதல் கடமை தன் பொறுப்பில் உள்ள மக்களை நல்ல ஆன்மீக வழியில் நடத்திச் செல்வது. அதன்பின், நிர்வாகம், இதைப்பகிர்ந்து அளித்து நிறைவேற்றலாம்.

மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ள கோவையில் மத நல்லிணக்கத்திற்கு தாங்கள் செய்யப்போகும் முயற்சிகள் என்னென்ன?

மத அடிப்படைவாதம், ஆன்மீகத்திற்கும், மனித உறவுகளுக்கும் எதிரானது. எனவே, மத அடிப்படைவாதத்தை ஒழிக்க தன்னலங்கள் கடந்த மனித உறவுகளை வளர்க்கப் பாடுபடுவேன். சமய உரையாடல், உறவாடல் நிகழ்த்துவதற்கான சாத்தியபாடுகளை ஏற்படுத்துவேன்.

நம் வாழ்வு’ வாசகர்களுக்கு தாங்கள் அளிக்கும் செய்தி :

என் விருதுவாக்கையே ‘நம் வாழ்வு’ வாசகர்களுக்கான செய்தியாக சொல்ல விரும்புகிறேன். கிறிஸ்துவின் மதிப்பீடுகளை நம் வாழ்வில் கடைப்பிடிப்போம். நம் சொல், செயல், சிந்தனை அனைத்தும் கிறிஸ்துவாக மாறுகின்றபொழுது இந்தச் சமுதாயம் நிச்சயம் நலம் பெறும்.

(நேர்காணல்: திரு. அ.ஜோசப் ராஜ், ஆகஸ்டு 25, 2002 ‘நம் வாழ்வு’ இதழிலிருந்து)

Comment