No icon

​​​​​​​தேர்தல் களமும், காலமும்!

சுழன்று சென்றது பம்பரம்!

ம.தி.மு.க.வின் சின்னமான பம்பரம் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். விசாரணைக்கு வரும்போது, பொதுச் சின்னம் பட்டியலில் பம்பரம் இல்லை என்றும், அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களின் பட்டியலிலும் பம்பரம் இல்லை என்றும், ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் ம.தி.மு.க.விற்குப் பம்பரச் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இருந்தாலும் தேர்தல் ஆணையம் கொடுக்கும் தனிச் சின்னத்தில்தான் நிற்பேன் என்று திருச்சி மக்களைவை வேட்பாளரும், ம.தி.மு.க.வின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.

பொள்ளாச்சியை நோக்கி தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்க வைத்தவர்!

இந்தியாவின் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் திங்கள் 19 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைப்பெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டத்தில் தேர்தல் நடைப்பெற உள்ளது. அதனால், தமிழ் நாட்டில் தேர்தல் களம் களைக் கட்டியுள்ளது. தேர்தல் வேட்பு மனு தாக்கல் மார்ச் 27-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. பல்வேறு வேட்பாளர்களும் தேர்தல் அதிகாரிகளின் வழியாக வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். அதில் சிலர் சற்று வித்தியாசமான முறையில் வந்து வேட்பு மனு பதிவு செய்தார்கள். பொள்ளாச்சியைச் சேர்ந்த பெஞ்சமின் பிரபாகர் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது, முன்பணமாக 25 ஆயிரத்தைச் செலுத்த வந்தார். அதற்கு அவர் 10 ரூபாய் நாணயங்களாக மாற்றி, முன்பணமாகச் செலுத்தினார். அதனை எண்ணுவதற்குள்ளாக அதிகாரிகள் குழம்பியிருக்கின்றார்கள். ரிசர்வ் வங்கி பலமுறை சொல்லியும் 10 ரூபாய் நாணயங்களைக் கடைக்காரர்கள், பேருந்து நடத்துநர்கள் வாங்க மறுக்கின்றார்கள். இந்த நாணயத்தை அனைவரும் வாங்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார் என்று கூறினார்.

தெரிந்த OPS ஒருவர்! தெரியாத OPS நாலு பேர்!

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வரவிருக்கும் தேர்தலில் ஒரு தனித்துவமான சவாலை எதிர்கொள்கிறார். முக்கிய அரசியல் எதிரிகளுடன், பன்னீர்செல்வம் தனது பெயரில் உள்ள நான்கு நபர்களுடனும் போராட வேண்டிய நிலையில் உள்ளார். அவர்கள் ஓ. பன்னீர்செல்வம் (41) த/பெ. ஒச்சப்பன், மதுரை, உசிலம்பட்டி, ஓ. பன்னீர்செல்வம் (46) த/பெ. ஒய்யாரம், இராமநாதபுரம் வாலாந்தரவை, ஓ. பன்னீர்செல்வம் (61) த/பெ. ஒத்தத்தேவர், மதுரை திருமங்கலம், ஓ. பன்னீர்செல்வம் (46) த/பெ. ஒய்யத்தேவர், சோலை அழகுபுரம், மதுரை ஆகிய நான்கு நபர்களுடன் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றார். எதிரிகளையும் வென்று, தன் பெயர் கொண்ட சக வேட்பாளர்களையும் வெல்வாரா? என்று பொறுமையுடன் காத்திருப்போம்.

Comment