No icon

தலையங்கம்

பாரத் மாதா கீ!!!

பாரத் மாதா கீ!!!
நாட்டில் உள்ள  பனிரெண்டு துறைகள் வழியாக, ஆம்.. குழாய்கள் மூலம் ஆறு இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பணமாக்கும் தேசிய பணமயமாக்கல் (குழாய்த்) திட்டத்தை (National Monetisation Pipeline)  பாஜகவின் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இதன்படி 26700 கிலோமீட்டர் சாலைகள் மூலமாக ரூ.1,60,200 கோடியும், இரயில்வே துறையின் மூலமாக ரூ.1,52,496 கோடியும், தொலைத்தொடர்புத்துறை மூலமாக ரூ.35,100 கோடியும் சுரங்கங்கள் மூலமாக ரூ.28,747 கோடியும்,  விமான நிலையங்கள் மூலமாக ரூ.20,782 கோடியும்,  மின்சாரப் பகிர்வு வழியாக ரூ.45,200 கோடியும், மின்சார உற்பத்தி வழியாக ரூ.39,832  கோடியும், இயற்கை வாயு வழியாக ரூ.24,462 கோடியும், பெட்ரோலியத் துறை வழியாக ரூ.22,503 கோடியும், பண்டக சாலை சொத்துகள் வழியாக ரூ.28,900 கோடியும்  துறைமுக சொத்துகள்  ரூ.12,828 கோடியும் தேசிய விளையாட்டு மைதானங்கள் வழியாக ரூ.11450 கோடியும், நகர்ப்புற ரியல் எஸ்டேட் வழியாக ரூ.15,000 கோடியும் திரட்ட,  நாற்பது ஆண்டு காலத்திற்கு அந்தப் பொதுச்சொத்துக்கள் குத்தகைக்கு விடப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 
கடந்த 75 ஆண்டுகளாக சுதந்திரம் பெற்ற இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட பொதுச் சொத்துக்களை, குத்தகை என்ற பெயரில் இப்போது  கூறு போடுகின்றனர். பண மதிப்பிழப்பில் தோல்வி, கறுப்புப் பணத்தை மீட்பதில் தோல்வி, தேசிய வரிவிதிப்பான ஜி.எஸ்.டி கொள்கையில் குளறுபடி, பொதுத்துறைப் பங்குகளை விற்பதில் மோசடி என்று அடுத்தடுத்து தம் ஒன்றிய பொருளாதாரக் கொள்கையில் மண்ணைக் கவ்வும் ஒன்றிய பாஜக அரசு, சாமானிய மக்களுக்கான அரசாக கிஞ்சித்தும் இல்லை.  கார்ப்பரேட்டுகளுக்கான வரிகளைத் தளர்த்தி, கடன் வாங்கிய மோடிக்களையும் மல்லையாக்களையும் பத்திரமாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்து, பிற கார்ப்பரேட்டுகளான அதானி - அம்பானி, ஜின்டால்களின் அசுரப் பிடியில் நாளும் சிக்கித் தவிக்கிறது. இதோ! தற்போது குத்தகை என்ற பெயரில் இந்தியாவை விற்பனைக்கு கடை விரித்திருக்கிறார்கள்.  சாமானியனின் சட்டைப்பையிலா இந்த ஆறு இலட்சம் கோடி ஓரமாக பாய்போட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது?!. கார்ப்பரேட்டுகள்தான் களமிறங்குவார்கள். 
தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல், உலக மயமாக்கல் (டுஞழு)என்று 1990-களுக்குப் பிறகு, தனியார்மயப்படுத்தப்பட்ட இந்தியா, பாஜகவின் கடந்த ஏழு ஆண்டுகளில் தனியாருக்கே சொந்தமாக்கப்பட்டுள்ளது.ஆயுஷ்மான் பாரத் என்பார்கள்; உஜ்வாலா யோஜனா என்பார்கள்; கதி ஷக்தி என்பார்கள். 100 இலட்சம் கோடி திட்டம்; 110 இலட்சம் கோடி திட்டம் என்பார்கள்.  ஆனால், கொரோனாவை நாம் விளக்கேத்திதான் விரட்ட வேண்டும். கரண்டியைக் கொண்டு தட்டில் கொட்டு கொட்டி துரத்த வேண்டும். ஆசிய அளவில் மிக அதிக நிதி ஆதாரத்தைக் கொண்டுள்ள பாஜக கட்சியின் அரசியல் சூட்சமும் வெற்றியும் இதில்தான் மறைந்திருக்கிறது.  மன்கிபாத்தின் மைக்குக்குதான் வெளிச்சம்.  
ஆர்எஸ்எஸ்-ஆல் கட்டமைக்கப்பட்ட பாஜகவின் பொருளாதாரக் கொள்கை மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது என்பதற்கு தேசிய பணமயமாக்கல் திட்டம் ஒன்றே உதாரணம்.  இலாபம் தருகின்ற அனைத்து அரசு நிறுவனங்களையும் அதன் சொத்துக்களையும் அடமானம் வைத்து பாஜக தன் இடது கையால் ஒவ்வொரு சாமானிய இந்தியனின் முகத்தில் கோமியத்தையும் மலத்தையும்  வலது கையால் கார்ப்பரேட்டுகளின் முகத்தில் சந்தனத்தையும் ஜவ்வாதையும் பூசுகின்றது.  பொதுச் சொத்துக்களை உருவாக்குவதற்கோ பாதுகாப்பதற்கோ உருப்படியாக இவர்களிடம்  திட்டம் ஒன்றுமில்லை.  
சந்தைப் பொருளாதாரம் என்ற நிலை மாறி, இந்தியாவே சந்தைப்படுத்தப்படுகிறது. இராணுவத் தளவாடம் முதல் காப்பீடு வரை அனைத்தும் தனியாரிடம் தாரைவார்க்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் மீது செஸ் முறையில் மத்திய அரசு திணிக்கின்ற வரிவிதிப்பால்  மூச்சுவிடவே திணறுகின்ற சாமானியனை, தேசிய பணமயமாக்கல் திட்டத்தின் மூலம் கோமா நிலைக்கு கொண்டுபோய் தற்போது பொருளாதார மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அட்மிட் செய்துள்ளனர்.  ஏற்கனவே கடன், கடன் என்று ஒன்றியமும் மாநிலங்களும் திணறும் நிலையில் இருக்கிற சொத்துக்களையும் குத்தகை என்ற பெயரில் விற்றுப் பிழைப்பது தேசத்தையே விற்பதற்குச் சமமாகும். இவர்கள் அண்டா குண்டாக்களை மட்டும் அடகு வைக்கவில்லை. அடுப்பங்கடையில் உள்ள மிளகு, சீரகம், அரிசி, பருப்பையும் அடகு வைக்கப் பார்க்கின்றனர்.  அரசுத்துறையை கஞ்சிக் குடிப்பதற்குக்கூட வழியில்லாமல் செய்துகொண்டிருக்கின்றனர்.
அம்பானி, அதானி, ஜின்டால், பதாஞ்சலி ராம்தேவ் மட்டுமில்லை; சாமானியன் உட்பட யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்று அறிவித்துள்ள  திறந்தவெளி சந்தையே ஒரு மோடிவித்தைதான். யாராவது எதிர்த்து கேள்வி கேட்டால் இது எல்லாருக்குமான வாய்ப்பு என்று தப்பித்துக்கொள்ளலாம் அல்லவா? அவர்களின் மறைமுகத்திட்டமே இந்தியாவை அம்பானிக்கும் அதானிக்கும் குத்தகைக்கு விடுவதுதான். இனி குடிக்கிற தண்ணீர் முதல்  கக்கூஸில் பயன்படுத்தும்  தண்ணீர்வரை அனைத்துக்கும் நாம் பணம் செலுத்த வேண்டும். சாலைகளில் விதிக்கப்படும் சுங்க வரியிலேயே நம் சங்கு அறுபட்டுவிடுகிறது. ஏன்?- என்று கேட்டால்  எதற்கெடுத்தாலும் நேருவை குறை சொல்வார்கள்? இந்திரா காந்தியை வம்புக்கிழுப்பார்கள். மீறியும் ஏன்? என்று கேட்டால், கேட்கிற நம்மையே தேசத் துரோகி என்பார்கள்; எப்படி? என்றால் ‘ஆப்கானிஸ்தானுக்குப் போ’ என்பார்கள்.  இப்போது ஆடு நனைகிறது என்று அழுகிற இன்னொரு ஓநாய் காங்கிரஸ் கட்சியும் பாஜக கட்சிக்கு சளைத்தது அல்ல.  காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியோ  2004-ல் ரூ.2564 கோடி, 2005-ல் ரூ.1569 கோடி, 2007-ல் ரூ.4151 கோடி, 2009-ல் ரூ.23552 கோடி, 2010-ல் ரூ.22144 கோடி,  2011-ல் ரூ.11894 கோடி, 2012-ல் ரூ. 23986 கோடி, 2013-ல் ரூ.15819 கோடி அளவுக்கு முதலீட்டு தாராளமயமாக்கல், பங்கு விற்பனை வழியாக பொது நிறுவனங்களை தனியார்மயப்படுத்தியுள்ளனர்.  பாஜக ஆட்சியில் 2017-18-ல் ரூ.156000 கோடி ரூபாய், 2018-19-ல்  ரூ.84000 கோடிக்கு பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்கப்பட்டுள்ளன.  அதாவது 1991 ஆம் ஆண்டு முதல் 2018 டிசம்பர் வரை  கடந்த 28 ஆண்டுகளில் இதுவரை ரூ.3,91,000 கோடி வரையிலான பொதுத்துறை பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் 2014 முதல் 2018 வரை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு மட்டும் ஏறக்குறைய  3 லட்சம் கோடி ரூபாய்க்கு பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்துள்ளது வெள்ளிடை மலை.  
  குத்தகை என்பது நிதி ஆதியோக் கமிட்டியின் சப்பைக்கட்டுதான்.  கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியா கூறு போடப்பட்டுள்ளது என்றால் கடந்த ஏழு ஆண்டுகளில் ஒவ்வொரு கூறும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இட ஒதுக்கீடுக்கு எதிரான ஒன்றிய பாஜக அரசின்கொள்கைக்கு வடிகால்தான் இந்த தேசிய பணமயாக்கல் என்ற திட்டம். ஆண்டுக்கு ஒன்றரை இலட்சம் இலக்கு; அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆறு இலட்சம் நிச்சயம்.  தனியார்மயமாக்கல் என்ற பெயரில், சேவை சார்ந்த துறைகளும் தாரைவார்க்கப்படுவதால் சாதாரண பொதுமக்கள்தான் பெரிதும் வஞ்சிக்கப்படுவார்கள். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபத்தில் இயங்க வைக்க முயற்சிக்காமல் சேலம் உருக்காலை உட்பட, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் உட்பட அனைத்தையும் போற போக்கில் குத்தகைக்கு விடுவது என்பது ஏற்றுக்கொள்ள இயலாது.  அடகில் உள்ள நகைளை நாங்கள் மீட்டு வாங்கிக் கொள்கிறோம் என்று கடந்த இரண்டு ஆண்டுகளில் சாமானியனின் கையிலும் கழுத்திலும் உள்ள நகைகளை சூறையாடுகின்ற தனியார் தங்கக் கொள்முதல் நிறுவனங்களைப் போல  இன்று குத்தகைக்கு, அடகுக்கு வைக்கப்படும் பொதுச் சொத்துகள் நாளை, நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு விற்கப்படாது என்பதற்கு எவரும் உத்தரவாதம் தரமாட்டார்கள். Stand up India! Skill India! Start up India! Make in India! všyh« R«kh! ï¥g Sale of India! 

பாரத் மாதா கீ! ஏக் ருப்பி. பாரத் மாதா கீ!  தோ ருப்பி. பாரத் மாதா கீ! பாஞ்ச் ருப்பி. நகி நகி...தஸ் ருப்பியா!

Comment